Tuesday, June 27, 2017

சித்தர் பாடல்கள்

அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் சோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
விந்தைமிகு சித்தர்களின் சிந்தையருட் செந்தமிழைச்
சிந்தைமிக மகிழ்ந்தேத்திச் சிந்தையுறச் செய்வார்க்கு
நிந்தைமிகு மாந்தருள்ளச் சந்தைபறந் தோடும்வாமின்
எந்தைதரும் மாநிதியால் சிந்தைதினம் மகிழ்ந்திருக்கவே --அன்பன் துரை
*****************************************************************************************
அழுகணிச் சித்தர்
ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
நொடியில்மெழு கானேனடி.
சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!
சிலையுங் குலையாதோ!
இராமதேவர் 
ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ நிற்குணத்தி னின்றநிலை நின்றிடுக.
கடுவெளிச் சித்தர்
மெய்குரு சொல்மற வாதே - சுத்த
மெஞ்ஞானப் பாதயைக் கடவாதே
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - சுத்த
சன்மார்க்க நன்நூலையே நாடு.
நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.
குதம்பைச் சித்தர்
முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி.
வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி?
பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி?
சட்டைமுனி
பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ?
பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ?
காழான உலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதனென்றால் மூலம்பாரே.

திருமூல நாயனார்
காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்
காணரிய பொருளாகுங் காட்டும் போதே
ஆண்பெண்ணாய் அலியாகி அடியுமாகி
அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி
வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் கானா
வெறும்பாழ தாகியே மேவி நின்றார்
சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத்
தேடரிய பாதவென்றே தெளிந்து நோக்கே.

திருவள்ளுவர்
ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
நாதனரு ளால்பதவி நாடுமே - ஞானமது
கண்டு நல்வினையுந் தீவினையு நாடாது பிறந்தே
வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு.

அகப்பேய் சித்தர்
தத்துவம் ஆனதடி .....அகப்பேய்
சகலமாய் வந்ததடி
புத்தியுஞ் சொன்னேனே .....அகப்பேய்
பூத வடிவலவோ.
இந்த விதங்களெல்லாம் .....அகப்பேய்
எம்இறை அல்லவடி
அந்த விதம்வேறே .....அகப்பேய்
ஆராய்ந்து காணாயோ.
சரியை ஆகாதே .....அகப்பேய்
சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் .....அகப்பேய்
கிட்டுவது ஒன்றுமில்லை.
யோகம் ஆகாதே .....அகப்பேய்
உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி .....அகப்பேய்
தேடாது சொன்னேனே.
சாத்திரமும் சூத்திரமும் .....அகப்பேய்
சங்கற்பம் ஆனதெல்லாம்
பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்
பாழ் பலங்கண்டாயே.
எத்தனை காலமுந்தான் .....அகப்பேய்
யோகம் இருந்தாலென் ?
முத்தனு மாவாயோ .....அகப்பேய்
மோட்சமும் உண்டாமோ ?
நாச மாவதற்கே .....அகப்பேய்
நாடாதே சொன்னேனே
பாசம் போனாலும் .....அகப்பேய்
பசுக்களும் போகாவே.
ஆணல பெண்ணலவே .....அகப்பேய்
அக்கினி கண்டாயே
தாணுவும் இப்படியே .....அகப்பேய்
சற்குரு கண்டாயே.
வாசியிலே றியதடி .....அகப்பேய்!
வான் பொருள் தேடாயோ
வாசியில் ஏறினாலும் .....அகப்பேய்!
வாராது சொன்னேனே.
பிச்சை எடுத்தாலும் .....அகப்பேய்!
பிறவி தொலையாதே
இச்சை அற்றவிடம் .....அகப்பேய்!
எம்இறை கண்டாயே.
மோட்சம் வேண்டார்கள் .....அகப்பேய்!
முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள் .....அகப்பேய்!
சின்மய மானவர்கள்.

இடைக்காட்டுச் சித்தர்
மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே
சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே
பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கம் கொள்ளாமல்
மெய்யான ஞானக்கல்வியினை விரும்புவாய் கல்மனமே!
பேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து
நாய்நரிகள் போலலைந்தால் நன்மையுண்டோ கல்மனமே!
தேகம் இழப்பதற்குச் செபஞ்செய்தேன்? தவஞ்செய்தேன்?
யோகமட்டுஞ் செய்தால்என்? யோசிப்பாய் கல்மனமே!
வாசிக்கு மேலான வாள்கதியுன் னுள்ளிருக்க
யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே
விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்
செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்தறிநீ புல்லறிவே.
இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை
அருள்துறையில் நிறுத்தி விளக்காகுநீ புல்லறிவே.

கொங்கணச் சித்தர்
ஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதை
உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே
பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.
மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்
விளக்கில் நின்றவன் வாணியடி
தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி
தாண்டிக் கொண்டான்பட் டாணியடி.
சிவன்ற னடியாரை வேதியரை சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையாதே அவர்
மனத்தை நோகவும் செய்யாதே.
இத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார்
என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்
செத்துப் போய்கூட கலக்கவேண்டும் அவன்
தேவர்க ளுடனே சேரவேண்டும்.
உற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும்
உண்டோ உலகத்தில் அவ்வைசொன்னாள்
அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
அவனே குருவடி வாலைப்பெண்ணே!
பூரணம் நிற்கும் நிலையறியான் வெகு
பொய்சொல்வான் கோடி மந்திரஞ்சொல்வான்
காரணகுரு அவனு மல்ல இவன்
காரியகுரு பொருள் பறிப்பான்.
எல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்தப்
பூமியி லேமுழு ஞானியென்றே
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப்பெண்ணே!

சிவவாக்கியர்
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான்
உருக்கிநெஞ்சை உட்கலந்திங்கு உண்மைகூற வல்லீரேல்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமோ!
என்னஎன்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை?
பன்னுகின்ற செந்தமிழ்ப் பதம்கடந்த பண்பென
மின்னகத்தில் மின்ஒடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்துள் ஈசனும் யானும்அல்லது இல்லையே!
செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பிவெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட
செம்பினில் களிம்புவிட்ட சேதிஏது காணுமே.
மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்?
மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்,
மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலா சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமல் கோடிகோடி முன்னறிந்த தென்பரே.
பிரான்பிரான் என்றுநீர் பிதற்றுகின்ற மூடரே
பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே?
பிரானுமாய்ப் பிரானுமாயப் பேருலகந் தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல்
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
வத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்?
எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ?
அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே?
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம்செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர்
காசினியில் எழுநரகைக் காத்திருப்பது உண்மையே.
யோகசாலை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே.
காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர்
நேரமாகக் கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரை.
முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக்
சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரேல்.
கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லைஅற் றிடம்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்?
இல்லைஇல்லை இல்லைஇல்லை ஈசன்ஆணை இல்லையே.
சாத்திரங்கள் பார்த்துப்பார்த்துத் தான்குருடு ஆவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள்
பாத்திரம் அறிந்துமோன பக்திசெய்ய வல்லீரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர்ஆவர் அங்ஙனே.
*************************************************************************************
ஞானச்சித்தர் வளளலார்
திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்
அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்
கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்
ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி
உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்
தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த
தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்
காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே
எல்லார்க்கும் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான்
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே
உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என
நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
தானே எனக்குத் தனித்து
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்கவே!
திருச்சிற்றம்பலம்
அன்பன் துரை

Wednesday, May 31, 2017

காணொளி(video): சித்தர் சிவவாக்கியார் பாடல்

l



தினெண் சித்தர் துதி

நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக் கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
நந்திடைக் காடரும் போகர் புலிக்கை யீசர்
கருவூரார் கொங்கணவர் காலாங்கி
சிந்தி அழுகண்ணர் அகப்பேய் பாம்பாட்டி
தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர்
செந்தமிழ் சேர் சித்தர் பதினெண்மர் பாதம்
சிந்தையுன்னிச் சிரத் தனியாய்ச் சேர்த்து வாழ்வோம்

**********************************************************

பதினெண் சித்தர்கள் சமாதி அமைந்த இடங்கள்

ஆதிகாலத்திலே தில்லையில் திருமூலர்
அழகர் மலை இராமதேவர்
அனந்தசயனம் கும்பமுனி திருப்பதி
கொங்கணவர் கமலமுனியாகி
சோதிரக் கஞ்சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லுமெட்டுக் குடியில் வான்மீகரோடு ஒர்
நெல்காசியில் நந்திதேவர்
பாதியரிச் சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனிமலை யோகநாதர்,
பரங்குன்ற மதில், மச்ச முனிபொய்யூர் கோரக்கர்
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீசுவரன்கோயிலில் தன்வந்திரி
திகழ் மயூரங்குதம்பை
சித்தருணை யோரிடைக்காடன் சமாதியிற்
சேர்ந்தன ரெமைக் காக்கவே.


Wisdom of Siddhas சித்தரியல்
Posted By Nathan Surya